அதேபோல அமெரிக்காவில் கிருத்தவம் மீதூக்கிய பண்பாடு நிலவுகிறது. அந்தப் பண்பாட்டு இம் மக்களை ஒரு சேரக் கட்டி வைத்து (பெரும் வளமிக்க நாடாக ஆனாலும் இன்னமும் உள்பிளவுகளால் உடையாமல்) காத்திருக்கிறது எனலாம். அவற்றிற்கு மேல் சேர்ந்த பல நாடுகளின் சமுக வழக்கங்கள் மேலும் மதிப்பீடுகள் எல்லாவற்றையும் அனுமதித்து அவற்றை அழிக்காமல் ஒரு அளவில் தன் மேல் பூச்சாக வைத்திருக்கிறது.
ஆனால் இப்போது அவர்கள் தம் நாகரிகத்தின் அடிப்படைகளைப் பற்றி துளைக்கும் கேள்விகள் கேட்கத் துவங்கி இருப்பது போல இருக்கிறது. நாகரிகத்தின் அடிப்படையாக இத்தனை நாள் இருந்த வெள்ளைத் தோல் அல்லது இனப் பற்றுதல், தீவிரக் கிருத்தவம், சுயமையத் தேசியம், உலகம் எக்கேடு கெட்டாலென்ன எம் நாடு சுகமாக இருப்பதுதான் அவசியம், உலகில் இதர நாடுகள் கீழே இருப்பதற்கு அவற்றில் உள்ள மக்களுக்குத் துப்பில்லாததுதான் காரணம் என்ற மனப் பான்மை ஆகியன மெள்ளக் குறைந்து நம் நாடு ஒன்றும் அலாதி இல்லை, மூன்றாம் உலக நாடுகளில் அல்லது (பொருளாதாரத்தில்) வளராத நாடுகளில் இருக்கும் பல பிரச்சினைகள் நம் நாட்டிலும் பல பகுதிகளிலும், பல சமுகக் குழுக்களிலும் இருக்கின்றன, ஏன் வெள்ளையரிலேயே ஒரு கணிசமான சதவீதம் மிக நலிவுற்று இருக்கிறார்கள் என்பன அவர்களுக்கு உறைக்கத் துவங்கி இருக்கின்றன.
>
>
ஒரு நாற்பதாண்டுகள் முன்பு இவற்றை மூடி மறைத்து முதலாளியம் எல்லாவற்றையும் சரியாக்கி விடும் என்று சொல்லி இருப்பார்கள், இப்போது ஆபத் பாந்தவா, கிருத்துவே என்ப தெல்லாம் உதவாது, என் காலிலேயே நான் நிற்பதுதான் எனக்குப் பெருமை என்ற (கால்வினியப் பாரம்பரியமான ஒரு) கவைக்குதவாத அகம்பாவமும் உதவாது, நிலைமை மிகவும் க்ஷீணித்து வருகிறது, இதில் இருந்து தப்பிப் பிழைக்க சமுக அரசியல் பண்பாட்டுச் சூழலிலும் நிறுவனங்களிலும் ஆழ்ந்த மாற்றங்களைச் சாதிக்க வேண்டும் என்று கருத்தை ஒத்துக் கொள்ளவோ அல்லது குறைந்த பட்சம் கவனித்துப் பார்க்கவோ துவங்கி இருக்கிறார்கள். இதற்கு மேலே போய்ச் சில நுட்பத் தளங்களில் அடிப்படை உளவியல் மாறுதல்கள் ஏற்படுகின்றன. கீழே உள்ள ஒரு கட்டுரை இந்த நுட்ப மாறுதலைக் கவனிக்கிறது.
>
>
அன்று உச்சத்தில் கர்வமாகவே அமர்ந்திருந்த அமெரிக்கருக்கு இன்று தாம் ஒன்றும் அத்தகைய உயர் பிறவிகள் அல்ல இதர மனிதர் போலத்தான் தாமும், சிறிது கவனமின்றி இருந்தாலே கூடத் தம் நாடு் சரிந்து தரை மட்டத்துக்கு வந்து விடும் சாதாரணம்தான், எனவே தமது கருவத்தை விட்டொழித்து மற்ற உலக மக்களின் பண்பாடுகள், போராட்டங்கள் ஆகியவற்றை மேலும் கவனத்தோடும், இழிவுணர்வின்றியும் அணுக வேண்டும் என்பது ஒரு கோட்பாடாக இப்போதுதான் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
சமீப காலமாக முதலாளியம் என்ற கருத்தே கேள்விக்குரியதாக ஆகி இருக்கிறது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அரசியல் சாசனம் கேள்விக்குரியதாகி இருக்கிறது, வெள்ளைத் இனமையச் சிந்தனை, கிருத்தவத் தீவிர வாதம், அரசுடைய இயக்கத்தில் உள்ள ரகசியத் தன்மை, மேல்தட்டு மனிதரின் கையில் அதிகாரமும் பணபலமும் குவிந்துள்ளமை, பாட்டாளிகளின் வாழ்க்கைத்தரம் குறைந்து வருவது, இவை எல்லாம் கேள்விக்குரியனவாகி இருக்கின்றன. ஆனால் இவை எவற்றாலும் பெரும் அடிப்படை மாறுதல்கள் ஏற்படவில்லை. என் கருத்தில், ஒரு அடிப்படை மாறுதல் எங்கு வந்துள்ளது என்றால், அது எப்படி மனித முடிவுகள் எடுக்கப் படுகின்றன, எந்த வகை முடிவெடுத்தல் நல்லது, சரி, மேலும் உபயோகமானது என்பதைப் பற்றிய கூட்டுக் குழுவின் வெளிப்படையாகச் சர்ச்சிக்கப் படாத ஒப்புமை உணர்வில் மாறுதல்கள் வந்திருக்கின்றன. இது குறித்துப் பல நூல்கள் வரத் துவங்கி இருக்கின்றன. இது ஒரு குறிப்பிடத் தக்க மாறுதல் என்று கருதுகிறேன். இந்த நூல்கள் வருவதற்குப் பல வருடங்கள் முன்பே இவற்றில் உள்ள கருத்துகள் சோதனைச் சாலைகளிலும், ஆய்வுக் கூடங்களிலும் ஆராயப்படத் துவங்கியாயிற்று. இந்த வகை ஆய்வுகள் இன்று நூல்களாக வருவதற்கு ஒரு காரணம் இன்றைய நிச்சயமற்ற பொருளாதார, பண்பாட்டுச் சூழல் என்பது மட்டுமல்ல. அமெரிக்க அரசும், பொருளாதார நிறுவனங்களும் உலகப் பொருளாதாரத்தில் வெறும் முஷ்டி பலத்தால் சதிகளால், பிற நாடுகளை உடைப்பதால், உலகச் சந்தையைத் தமக்குச் சாதகமாகத் தொடர்ந்து மாற்றுவதாலெல்லாம் வெல்ல முடியாது என்று ஒரு உணர்தல் வந்துள்ளதால் என்று சொல்லலாம்.
வெற்றி என்பது பல நேரம் வென்று பழகியவருக்கே கிட்டிக் கொண்டிருப்பதற்கு ஒரு காரணம் தான் வெல்வது பற்றிய சர்வ நிச்சயத்துடன் அவர்கள் இயங்குவதும், தொடர்ந்து முடிவெடுப்பதும் என்பன காரணங்களாகச் சுட்டப்படுகின்றன.
அந்த நிச்சய உணர்வு எங்கிருந்து வருகிறது என்பதை கீழ்க்கண்ட கட்டுரை ஒரு விதமாக விளக்குகிறது.
எப்படி? இக்கட்டுரையைப் படித்த பின் நீங்களே 'ஊகித்து முடிவு செய்து' அவற்றை எழுதிச் சொல்கிறீர்களா என்று பார்க்கிறேன்.
>
>
http://www.nytimes.com/2007/08/28/science/28conv.html?ex=1189137600&en=fb0223301282a131&ei=5070&emc=eta1
>
>
SCIENCE | August 28, 2007 |
No comments:
Post a Comment